73   யுத்த காண்டம்

மனிதனிடம் அஞ்சி ஓடினான் என்ற அபவாதத்தை அவன் ஏற்கத்
தயாராயில்லை.     மானம்   இழந்து தான் வாழவிரும்பாத போது
இந்திரனை    வென்ற    மகனும்  வாழக்கூடாது என்ற எண்ணம்
அவனுடைய      அடிமனத்தில்    இருந்திருத்தல்    வேண்டும்.
அதனாலேயே அவன்     இறப்பது  உறுதி என்று அறிந்திருந்தும்
அவனை மறுபடியும்   போருக்கு    அனுப்புகிறான்.   இவ்வளவு
உறுதிப்பாட்டுடன் இராவணன் இருந்தான் என்றாலும், இந்திரசித்தன்
இறந்தபொழுது அவன்   நிலைகுலைந்துவிட்டான்  என்பது அவன்
கதறி அழும் பாடல்களில் நமக்கு நன்கு விளங்குகின்றது. இதுவரை
குலத்து மானம் காக்க  இட்ட பலி   என்று பேசிக்கொண்டு வந்த
இராவணன், இந்திரசித்து இறந்த பிறகு, அவன் மனத்தின் ஆழத்தில்
புதைந்திருந்த எண்ணம் வெளிப்படுகிறது. வாய், குல மானம் என்று
பேசினாலும், அடிமனத்தில் தன்னலம்   நிறைந்திருந்தமையாலேயே
இந்த விபரீத விளைவு ஏற்பட்டது  என்பதை     மகனை நோக்கி
அழும்பொழுது அவனையும் அறியாது சொல்லிவிடுகிறான்.
 

'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம்

மேவி,

நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,

எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,

உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து

உள்ளார்?".
 

(9224)
 

இப்பாடலில்    வரும்,   நினைத்தது எல்லாம் முடித்து நின்ற
தனக்கு    ஒரு   பெண்    காரணமாக,    மகனுக்கு நீர்க்கடன்
செய்யவேண்டி வந்ததே என வருந்துகிறான்.  மகன்  தந்தைக்குச்
செய்ய    வேண்டிய     நீர்க்கடனை, தந்தை மகற்குச் செய்யும்
அவலநிலை வந்ததையும், அதற்குக்    காரணமாய் இருந்தது ஒரு
பெண்ணே என்பதையும், இராவணன்   பேசும்பொழுது    அவன்
தந்தைப்பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை அறியலாம். இந்த
நிலையில்,    பந்த    பாசங்கள்,    விருப்பு   வெறுப்பு ஆகிய
அனைத்தையும்  கடந்து, போருக்குப் புறப்படுகிறான்  இராவணன்.
இதுவரை,     இன்று     இல்லாவிட்டால்   நாளைவெற்றி என்ற
எண்ணத்தில்    மிதந்து வந்த இராவணன் இது    இறுதிப்போர்
என்பதையும் இதில் இரண்டில் ஒன்று முடிவாகிவிடும் என்பதையும்
உணர்ந்து பின்வருமாறு பேசுகிறான்: