அடுத்துள்ள திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால், முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே 'வசிட்டனே புனைந்தான், மௌலி' என்று முடிக்கிறான் கவிஞன். முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள். அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் (இலக்குவ, சத்ருக்கனர்) கவரி வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும். அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியணைத் தாங்கினான் என்றால் இராமன் ஆட்சி என்பது தொண்டு என்ற அடித்தளத்தின்மேல் அமைந்துள்ளது. என்று அறிய முடியும். தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஓர் அன்பே வடிவான குகனால் சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலைநின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன் ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான் என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும் அமைந்திருத்தலைக் கவிஞன் உருவகமாகப் பேசுகிறான். |