82

இச்   செய்தி   குறிக்கும்  பாடல்கள்  இல்லை.  தமிழ்  நாட்டுப்புறப்
பாடலுக்குக் கருத்து மூலம் எதுவெனத் தெரியவில்லை.

தாடகை  அகத்திய முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றை வான்மீகி
விரிவாக  உரைக்கிறார். “கம்பனோ அவ் வரலாற்றைக் குறிப்பாகக் கூட
காட்டவில்லை”  என்று அறிஞர் ஒருவர் குறிப்பிடுகிறார்.20 சென்னைக்
கம்பன்  கழகப்  பதிப்பில்  இது  பற்றிய  செய்தி  இல்லை. ஆனால்,
மிகைப்பாடல்களில்    தாடகையின்    சாப    வரலாறு   விரிவாகக்
கூறப்படுகிறது.  மேலும் வை.மு.கோ.வின் பதிப்பில்  இவை நூலிலேயே
காணப்படுகின்றன.     எனவே,     கம்பன்    கருத்தை    அறிந்து
கொள்வதிலேயே    இடர்ப்பாடு    தோன்றுகிறது.   தவிர,  தாடகை
இராவணனுக்குப்  பாட்டி என்ற உறவு  முறையைக் கம்பன் பேசுகிறான்.
(VI, 13:32)

இராவணனின்  தூண்டலால்  வேள்விக்கு  இடையூறு  செய்வதாக
விசுவாமித்திரர்    கூறுகிறார்.    கவிஞனும்,   தாடகை   வீழ்ச்சிக்கு
இராவணனின்  கொடி  வீழ்வதை   உவமையாக்குகிறான். இந் நூலைத்
தழுவிச்  செல்லும்  சீதா  கலியாணமும் இராவணனின் பாட்டி என்றே
தாடகையைக்   குறிப்பிடுகிறது.   அவதார   நோக்கம்  உள்ளுறுத்துச்
செய்யப்பட்ட  இக்கருத்தை வான்மீகம் முதலாகிய வடபுல இராமாயண
நூல்களிற் காண இயலவில்லை.

பெண்ணாயினும்   கொல்லப்படத்தக்கவள்   என்னும்   முடிவுக்கு
இராமன்    வருவதற்கு    வான்மீகமும்   தொரவெ   ராமாயணமும்
முன்னுதாரணங்களைக்     காட்டுகின்றன.   துளசியும்,  எழுத்தச்சனும்
முனிவர்        ஆணையை,      விருப்பமின்றேனும்      இராமன்
நிறைவேற்றுவதாகக்     காட்டுகின்றன.     தமிழ்     வில்லுப்பாட்டு
வேதவாக்கியத்தைப்   பிரமாணமாகக்   காட்டுகிறது.  கம்ப  ராமனோ,
தொடக்கத்தில்   முதலில்  பெண்ணென  மதித்தானாயினும்,  முனிவர்,
“கோறி  இது  அறம்”  என்றதும்,  “நீங்கள்  மறமே செய்ய ஏவினும்,
செய்குவல்;    ஏனெனில்,    உங்கள்   சொல்   வேதம்.   அதற்குக்
கட்டுப்படுவது  என்  கடமை,”  என்று  தன்  கீழ்ப்படியும் பண்பினை
வெளிப்படுத்துகிறான்.  இராமனின்  இன்றியமையாத  இந்த ஆளுமைப்
பண்பினைக் கம்பன் படைத்துள்ள இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது.


20. பி.சி. சீதாபதி, வான்மீகி - கம்பன் மாற்றங்கள் : பால காண்டம்
(கோவை: கம்பன் கழகம், 1984), ப. 47.