கதிர்படு வயலின் உள்ள- கதிர்களில் விளையும் வயல்களில் உள்ள நெல் முதலியவைகளையும்; கடி கமழ் புனலின் உள்ள- மணம் வீசு நீரில் உள்ள தாமரை மலர் முதலியவைகளையும்; முதிர் பயன் மரத்தில் உள்ள- முதிர்ந்த பயன் தரத்தக்க மரங்களில் உள்ள காய். கனி முதலியவைகளையும் முதிரைகள் புறவின் உள்ள- முல்லை நிலத்து விளையும் பருப்பு முதலியவைகளையும்; பதிபடு கொடியின் உள்ள- (நிலத்தில்) பதிக்கப்பட்டுள்ள கொடிகளில் விளையும் மலர். கனி முதலியவைகளையும்; படி வளர் குழியின் உள்ள- நிலத்தில் உண்டான குழிகளில் விளையும் கிழங்கு முதலியவைகளையும்; மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-தேனாகிய வளத்தைப் பல வகைப்பட்ட மலர்களிலிருந்து சேகரிக்கும் வண்டுகள் போல; கொள்வார்- உழவர்கள் பலவகை விளைச்சல் வளத்தைக் கொள்வார்கள். வண்டுகள் பல்வகை மலர்களிலும் தேன் கொள்வது போல உழவர்கள் வயல் முதலான பல இடங்களிலும் விளைகின்ற நெல் முதலிய பல வளங்களையும் எடுத்துக் கொள்வார் என்பது கருத்து. ‘உள்ள’ என வருவன அனைத்தும் வினையாலணையும் பெயர்கள். புறவு: முல்லை நிலம். 21 |