வண்டு- (ஆண்) வண்டுகள்; பருவ மங்கையர்- இளம் பெண்களின்; பங்கய வாள் முகத்து- தாமரை போன்ற ஒளிகொண்ட முகத்தில் உள்ள; உருவ உண்கணை- அழகுடையனவும் மை இடப்பட்டனவுமாகிய கண்களை; ஒண் பெடை ஆம் எனக் கருதி- ஒளி கொண்ட பெண் வண்டுகள் என்று நினைத்து; அன்பொடு காமுற்று- அன்போடு விரும்பி; கைகலும்- நாளெல்லாம்; மருத வேலியின் வைகின- மருத நிலத்திலே தங்கின. வண்டுகளைப் பெண்களின் கண்களுக்கு உவமை கூறுதல் மரபு; அந்த இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டது இக் கற்பனை. பெண்களின் கண்கள் என்பது தெரியாமல் பெண் வண்டுகள் எனக் கருதி ஆண் வண்டுகள் நாளெல்லாம் காத்திருப்பதற்குக் காரணம் தக்க செவ்வி/தருணம் வாய்க்க வேண்டும் என்பதே. இலவு காத்த கிளி போல ஏமாறப் போவது தெரியாமல் மயங்கின. இது மயக்க அணி. கணை + கண்ணை: தொகுத்தல் விகாரம் 23 |