தீம் சொல் இளங்கிளி- இனிய சொற்களைப் பேசும் இளங்கிளிகள்; தினைச் சிலம்புவ- தினைப் புனங்களிலே ஒலிப்பன; நாகு இள வண்டு- இளமையான வண்டுகள்; நனைச் சிலம்புவ- மலர் அரும்புகளில் ஒலிப்பன; புள் இனம்- பறவைகளின் கூட்டம்; பூம் புனல் சிலம்புவ- நீர் நிலைகளில் ஒலிப்பன; வள்ளியோர் மனை- கொடையாளர் இல்லங்களில்; மங்கல வள்ளை சிலம்புவ- மங்கலமான உலக்கைப் பாடல்கள் ஒலிப்பன. தினைப்புனங்களில் கிளிப்பாட்டு: மலர் அரும்புகளில் வண்டின் பாட்டு: நீர்நிலைகளில் பறவைப் பாட்டு; வள்ளல்களின் இல்லங்களில் உலக்கைப் பாட்டு; ஆக. எங்கணும் இசைமயம். நனை: இளம் அரும்பு. நாகு-இளமை; ஒரு பொருட் பன்மொழி. மகளிர் நறுமணப் பொடி முதலியன இடிக்கும் போது தம் தலைவனைச் சிறப்பித்துப் பாடும் பாட்டு வள்ளைப் (உலக்கை) பாட்டு. ‘புனைச் சிலம்புவ’ என்றொரு பாடமும் உண்டு. எதுகை நோக்கில் இப்பாடம் சிறப்புடையது. புனை எனினும் நீர் என்பதே பொருள். (பெருங். 4:7.75) சிலம்புவ......சொற்பொருட் பின்வரு நிலையணி. 29 |