பெருந் தடங்கண்- பெரிய அகலமான கண்களை உடைய; பிறை நுதலார்க்கு எலாம்- பிறை வடிவமான நெற்றியை உடைய பெண்களுக்கெல்லாம்; பொருந்து செல்வமும்- நிலையாகப் பொருந்திய பொருட் செல்வமும்; கல்வியும்- நூலறிவும்; பூத்தலால்- நிறைந்திருப்பதால்; வருந்தி வந்தவர்க்கு ஈதலும்- வறுமையால் வருந்தி. உதவி நாடி வந்தோர்க்கு வழங்குதலும்; வைகலும் விருந்தும் அன்றி- நாள்தோறும் விருந்து ஓம்புதலும் அல்லாது; விளைவன யாவை- (பெற்ற செல்வத்தாலும் சேர்த்த கல்வி அறிவாலும்) விளைவன வேறு யாவை? (அவையே பயனாக விளைகின்றன என்பது வினாவின் விடை) கண்ணும் நுதலும் பெண்டிர்தம் அழகைச் சுட்டின; ஈதலும் விருந்தோம்பலும் செயலைச் சுட்டின. பூத்தல் என்பது முன்னைய அரும்பு நிலையையும் பின்னைய கனிவு நிலையையும் உட்கொண்டு நிறைநிலை சுட்டிற்று. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை உணர்ந்தவரிடம் சேர்ந்ததால் பொருந்து செல்வம் என்றார். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்னும் குறள் (221) நினைத்தற் பாலது.
விருந்து ஓம்புதலைக் குறித்தலால் ‘விருந்து’ ஆகு பெயர். 36
அன்ன சத்திரம் |