மயில் இயல்புடை பெயர்வன- மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று நடமாடுகின்றன; மிளிர்முலை மணி இழையின் வெயில்புடை பெயர்வன- அப்பெண்களின் தனங்களில் அணிமணிகள் பதித்துச் செய்யப்பட்ட அணிகலங்களைப்போல வெயில் எங்கும் ஒளி வீசின; குழலின் புயல்புடை பெயர்வன பொழில் - அப்பெண்களது கூந்தலைப் போல மேகங்கள் சோலைகளில் சஞ்சரித்தன; அவர் விழியின் கயல் கடிகமழ் கழனி புடை பெயர்வன - அவர்களது கண்களைப் போல கயல் மீன்கள் மலர் மணம் கமழும் வயல்களிலே புரள்வனவாமே. பெண்களின் சாயலுக்கு மயிலும். அவர்களின் அணிகலன்களின் ஒளிக்கு வெயிலும். கூந்தலுக்கு மேகமும். கண்களுக்கு மீன்களும் ஒப்பாகி. அந்நாட்டில் புடை பெயரும் என்பது கருத்து. பெண்களது சாயல் முதலிய உவமேயங்களை - உவமானங்களாக்கி. மயில் முதலியவைகளுக்கு மாற்றிக் கூறியதால் இது “எதிர் நிலை அணி” ஆகும். மயில்கள் மகளிரின் சாயலுக்குத் தோற்றும். வெயில் மணி இழைச் சுடருக்குத் தோற்றும். புயல் குழலுக்குத் தோற்றும் கயல் கருவிழிக்குத் தோற்றும் புடை பெயர்ந்தன என்று பொருள் கூறினும் பொருந்தும். புடை பெயர்தல்: அப்பால் செல்லுதல். |