வனிதையர் அயல் விழி - அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற கண்கள்; விதியினை நகுவன- நான்முகனைப் பழிப்பன; அவர் நடை பிடியின் கதியினை நகுவன- அவர்களது நடை பெண் யானைகளின் நடையைப் பழிப்பன; புணர் முலை கமலப் பொதியினை நகுவன - அப்பெண்களின் இணைந்துள்ள மார்புகள் தாமரை அரும்புகளைப் பழிப்பன; வதனம் கலைவாழ் மதியினை நகுவன- அவர்களது முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும். பெண்களின் விழிக்கு வேலும். நடைக்குப் பெண்யானை நடையும். தனங்களுக்குத் தாமரை அரும்பும். முகத்துக்குச் சந்திரனும் உவமைகளாகச் சொல்லப்படுவன. இங்கு வேல் முதலியவை விழி முதலியவைகளைவிட விஞ்சியிருப்பதால் அவைகளை நகுவனவாயின என்றது; எதிர்நிலையணியாம். படைத்த நான்முகனே மயங்கவல்ல விழிகளாதலின் தமக்கு நிகராகா (நான்முகனை) கண்கள் பழிப்பனவாம். மலர்வதும் குவிவதுமான தாமரை முகையைப் போலல்லாது என்றும் ஒரு தனிமையாய் இருக்கும் தனங்கள் தாமரை முகைகளைப் பழித்தன. தேய்தலும் வளர்தலுமாக உள்ள மதி - என்றும் மலர்ந்தே உள்ள முகத்துக்கு நிகராகா தாதலின் மதியை முகம் பழிப்பன வாயின என்று கூறியதன் நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது. 44 |