பக்கம் எண் :

58பால காண்டம்  

வணிகத்துக்குரிய    கப்பல்கள்    பெரிய மணிகளையும். பொன்னையும்
கொண்டு   வந்து  குவிப்பனவாம்;  ஊதைகள்  உறையுறும்  அமுதும்
சொரிவன
-   காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம்;
காதைகள் செவிநுகர் கனிகள் சொரிவன
- கவிஞர்களின் காப்பியங்கள்
செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம்.

மக்கள்    அணியும் மலர் மாலைகள் தேனையும். கப்பல்கள்.  மணி.
பொன்   ஆகியவைகளையும்.   காற்று   உயிர்   காக்கும்    அமுதத்
திவலைகளையும்  காப்பியங்கள்  இனிய பாக்களையும்    சொரிவனவாம்
என்பது கருத்து. பாதைகள்: காலினும் கலத்தினும் உறை: துளி

கவியின்பம்     செவியால் நுகரப்படுவதாதலின் ‘செவி நுகர் கனி”
என்றார்.  கோதை: பெண்கள் கூந்தல் என்பதால். கூந்தலின் அணிந்த
மலர் மாலை தேன் சொரியும் என்றும் பொருள் கூறலாம். சத்துருக்கள்
உரையில்   மாண்பினை   செவிப்   புலம்   நுகர்வதோர்   தெய்வத்
தேன்கொலாம் (2266) என்று குறிப்பது இங்கு ஒப்பிடத்தக்கது.      51
 

83.இடம் கொள் சாயல் கண்டு. இளைஞர் சிந்தைபோல்.
தடங் கொள் சோலைவாய். மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
 

தோகை   மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்கள்; தடம்
கொள்  சோலைவாய்
-  விசாலமான சோலையினிடத்தே; இடம் கொள்
சாயல்  கண்டு
-  (தமது பெண் மயில்களின்  பெருமைக்குரிய சாயலைப்
பார்த்து);  இளைஞர் சிந்தை போல்- இளம் வயதினரான ஆண்களின்
(மனத்தைப்   போல;  மலர்  பெய்தாழ்  குழல்-  மலரணிந்த  நீண்ட
கூந்தலையும்;  வடம்   கொள்  பூண்  முலை-  முத்து  மாலைகளை
அணிந்த   தனங்களையும்   உடைய;  மடந்தை  மாரொடு-  அந்தப்
பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம்.

ஆண்  மயில்கள் சோலையில் உலாவும் பெண்களை சாயலால் மயில்
போன்றிருக்கும்   அவர்களைப்   பெண்மயில்கள்   என்று     கருதிப்
பின்தொடரும்    என்றது    மயக்கவணி.    இளைஞர்:      காளைப்
பருவத்தினரான  ஆண்கள்.  இடம்:  பெருமை.  வடம்: முத்து   வடம்.
தாழ்குழல்: நீண்ட கூந்தல்.                                  52
 

84.வண்மை இல்லை. ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை. ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை. பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை. பல் கேள்வி மேவலால்.