ஆவி ஒத்து சேவல் கூவ- தனது உயிருக் கொப்பான ஆண் புறாவானது கூவி அழைக்கவும்; அன்பின் வந்து அணைந்திடாது- அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல்; ஓவியப் புறாவின் மாடு இருக்க- அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண் புறாவின் பக்கம் (ஆண் புறாஉடன்); இருந்ததால் ஊடுபேடை- ஊடல்கொண்ட பெண்புறா; தாஇல் பொன்தலத்தில்- குற்றமற்ற தேவ உலகிலே; நல்தவத்தினோர்கள் தங்கு- நல்ல தவம் செய்தவர்கள் தங்கியுள்ள; தாள் பூவுயிர்த்த- தாளை உடையதும் மலர்கள் பூத்திருப்பதுமான; கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்- கற்பகச் சோலையிலே சென்று மறைந்திருக்கும். கோபுர வாயிலில் வாடும் ஆண்புறா. ஓவியப் புறாவை உண்மை என நினைத்து அதன் அருகிருக்கும் அதனைக் கண்டு ஊடிய பெண்புறா விண்ணுலகத்தின் கற்பகச் சோலையிலே புகுந்து மறைந்திருக்கும். இது மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத் தருவது. சந்தானம். மந்தாரம். பாரிசாதம். கற்பகம். அரிசந்தனம் என்ற ஐவகை மரங்கள் நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்: குற்றமில்லாத. தாள்: அடி நாளமும் ஆம். 23 எழுநிலை மாடம் |