கல் அடித்து அடுக்கி- மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச் சுவரெழுப்பி; வாய்ப்பளிங்கு அரிந்து கட்டி- முன்புறம் பளிங்குக் கற்களை அறுத்துக் கட்டி; மீது எல்லுடை பசும் பொன் வைத்து- அதன்மேலே ஒளிவீசும் பொன்தகடு வேய்ந்து; இலங்கு பன்மணிக் குலம் வில்லிடக் குயிற்றி- விளங்குகின்ற பலவகை மணிகளை ஒளிவீசும்படி (பொன்தகட்டில்) பதித்து; வாள் விரிக்கும் வெள்ளி மாமரம் புல்லிடக் கிடத்தி- ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன விட்டத்தை அதன் மீது பொருந்துமாறு வைத்து; வச்சிரத்த கால் பொருத்தி- வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி. இது முதல் மூன்று பாடல்கள் குளகம். “குளகம் பல பாட்டு ஒருவினை கொள்ளும்” என்றபடி மௌலி சூட்டி அன்னவே என்ற மூன்றாம் பாட்டில் பொருள்முற்றுப் பெரும். கல்: மணிக்கல். அதனைச் செம்மையுறச் செதுக்கிச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன்புறம் பளிங்குக் கற்களை அளவுற அறுத்துக்கட்டி அதன் மேலே பென்தகடு வேய்ந்து அந்தத் தகட்டிலே பலவகை மணிகளைப் பதித்து- வெள்ளக் கை மரத்தைப் பொருததும்படி - வைத்து வைரத்தூண் நிறுத்தி என்பது கருத்து. 24 |