பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்233

அவள்   இருப்பது  இவ்வரை  -  இராம  அந்தத் தாடகை இருப்பது
இந்த   மலைதான்; என்பதனின் முன்பு - என்று சுட்டிப் காட்டுவதற்கு
முன்பாக;  ஓர்மைவரை  நெருப்பு  எரிய-  ஒரு கரியமலை. உச்சியில்
நெருப்பு  எரிந்து  கொண்டிருக்க;  வந்தது  என  வந்தாள் - எதிரில்
வந்தது போலத் தாடகை எதிரே வந்தாள்.

கைவரை:  கையையுடைய   மலை   (அதாவது  யானை).  உவமை
ஆகுபெயராய் ராமனை உணர்த்தும்.  ராமனுக்குக்  காளை உவமையாம்.
உரை:  முதனிலைத்  தொழிற்பெயர்.  கேளா: செயா  என்ற வாய்பாட்டு
வினையெச்சம்.  ஐவர்:  ஐந்து  இந்திரியங்கள்.   அர்:   சிறப்பு விகுதி.
அகம்:   மனம்.  ‘ஓர்  மைவரை  நெருப்பு   எரிய  வந்தது’  என்பது
உருவகம்.  மை:கருமை.  இத்தொழில்   இயற்றுபவள்  எங்கு உறைவது
எனக்கேட்ட   இராமபிரானுக்கு  ‘அவள்   இருப்பது  இவ்வரை’  என
முனிவன்   கூறுவதற்கு   முன்  தாடகை   எதிரே  வந்தாள்  என்பது
பொருள்.                                                 29
 

368.

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர. வந்தாள்.
 

சிலம்புகள்  சிலம்பிடை   செறித்த   கழலோடும்  - கால்களில்
அணிந்த சிலம்புகளுக்கிடையே  மலைகளைச்     செறியும்படி  வைத்த
கால்களோடும்.;  நிலம்புக   மிதித்தனள்  -  நிலம்  கீழே  புகும்படி
மிதித்தாள்;  நெளித்த  குழி   வேலைச்சலம்   புக   -  அதனால்
நெளியப்பெற்ற   குழியில் கடல் நீர்புகவும்; அனல்தறுகண் அந்தகனும்
-  நெருப்பென  விழிக்கும் வலிமைமிக்க எமனும்; அஞ்சிப் பிலம்புக -
பயந்து.  குகையில்   புகுந்து  ஒளியவும்;  நிலக்கிரிகள்  பின்தொடர
வந்தாள்   
-  நிலத்திலுள்ள  மலைகளெல்லாம்  பின்னே  தொடர்ந்து
வரவும் தாடகை வந்தாள்.

சிலம்புகள்:    மலைகள். சிலம்பு; பாதச் சிலம்பு. செறித்த; அமைத்த;
மலைகளைப்  பதித்துச்  செய்த  காற்சிலம்புகளை   அணிந்திருக்கிறாள்
என்பது கருத்து. கழல்: பாதம். நெளித்து:  நெளியச்  செய்த (பிறவினை).
அந்தகன்:  எமன்.  பிலம்:   குகை.   பாதத்தாலம்  நிலம் கீழே செல்ல
மிதித்தாள்.  அதனால்   உண்டான   குழியில் கடல் நீர்வந்து புகுந்தது.
எமனும்   அவளைக்    கண்டு    அஞ்சியோடி   குகையில்   சென்று
ஒளியலானான்.    நிலத்திலுள்ள    மலைகளெல்லாம்  தன்னைப்  பின்
தொடர்ந்துவர.  அவ்வரக்கி   வந்தாள்  என்பதாம். சலம்: நீர். தறுகண்:
வலிமை.   தாடகையின்  வருகையையும்.   அவளது   தோற்றத்தையும்
இவ்வாறு புனைந்து கூறுகிறார்.                               30
 

369.

இறைக்கடை துடித்த புருவத்தள்.
   எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த
   பில வாயள்.