பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்229

உருத்து   மண்  எடுப்பினும்    -  கோபித்து.  இந்தப்  பூமியை
எடுப்பதாயினும்;   கடலை    வாரினும்    -    கடல்நீரையெல்லாம்
அள்ளுவதானாலும்;  உருத்து  விண்  இடிப்பினும் - கோபம்கொண்டு
மேகத்தை  இடிப்பதானாலும்;  வேண்டின்  செய்கிற்பாள்  -  அவள்
விரும்பினால் செய்ய வல்லவளாவாள்;  எண்  உரு  தெரி  வரும் -
எண்ணத்தினால்   செய்யப்படும்   நுண்மையான  பாவமும்  (உடலால்)
செய்யப்படும்  பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி
-  ஒரு சேரச்  சேர்ந்து;  ஓர்பெண்  உருக்கொண்டு  என  -  ஒரு
பெண்வடிவைக்  கொண்டது  என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத்
திரிகின்ற தன்மை உடையவள்.

‘மண்’  சினையாகு  பெயராய்ப்  பூமியை  உணர்த்தும்.   உருத்தல்:
சினத்தல். வாரினும்: வாருதல் (அள்ளுதலுமாம்). விண்: வானம்:    இங்கு
மேகத்தை  உணர்த்தும்.  நுண்மையான  பாவம்  பருமையான   பாவம்
என்பன  கண்ணால்  காண  முடியாதது.  பெற்றி:  தன்மை.    பூமியை
எடுக்கவும்.    கடல்   நீரை   அள்ளவும்.   மேகத்தை     இடிக்கவும்
செய்யவல்லவள்.   பாவமெல்லாம்   திரண்டு   ஒரு  பெண்   வடிவம்
கொண்டது போன்ற தன்மையள் என்பது கருத்து.                 22
 

361.
 

‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.
உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:
 

பெரு  வரை இரண்டொடும்  -  பெரியமலைகள்  இரண்டுடனும்;
பிறந்த நஞ்சொடும்
- தன்னிடம் தோன்றிய  நஞ்சுடனும்; உரும் உறழ்
முழக்கொடும்  
- இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழித் தீயொடும்
-   ஊழிக்  காலத்துப்  பெரு  நெருப்புடனும்;  இரு பிறை  செறிந்து-
இரண்டு  பிறைச்  சந்திரர்கள் சேர்ந்து; எழுகடல் உண்டாம்  எனின்-
எழுகின்ற  கடல் ஒன்று உண்டென்றால் அது; வெருவரு  தோற்றத்தள்
மேனிமானும்  
-  யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது
உடலை ஒத்ததாகும்.

பெருவரை:  பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்
இரண்டும்.   நஞ்சு:   பெருங்குரல்.   இடிமுழக்கம்.  கூந்தல்:  ஊழித்தீ.
கோரைப்பற்கள்.  பிறைச்   சந்திரன்   இவையெல்லாம்  உடைய  கடல்
ஒன்று   உண்டெனில்   இவள்   உடலுக்கு   ஒக்கும்  எனக்  கூறியது
இல்பொருள் உவமை யணியாம். மானும்: ஒத்திருக்கும்.             23
 

362.
 

‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே;*