குணவாயில்
கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
"குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி."
5
‘பொலம்
பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக்காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ’ என-
அவன் உழை
இருந்த தண் தமிழ்ச் சாத்தன்,
‘யான் அறிகுவன் அது பட்டது’ என்று உரைப்போன்,
‘ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி,
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன். அது கொண்டு
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட-
“கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க” என்று ஏகி-
பண்டு தான் கொண்ட “சில் அரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை” என-
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், “அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு”என-
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங் கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடு உற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்’ என-
அதிராச்
சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி,
“கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின்,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்” எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்’ என-
குன்றக்
குரவையும்-என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு
இவ் ஆறு-ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்.
இது-பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு-என்.