தாழ் நீர்
வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து,
தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க-
‘வேந்து
உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், “மாதவி மகட்கு
நாம நல் உரை நாட்டுதும்” என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
“இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை;
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள்;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!
பிள்ளை
நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல,
வடதிசைப் பெயரும் மா மறையாளன்,
“கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க” என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறும் மறுகி,
“கருமக் கழி பலம் கொள்மினோ” எனும்
அரு மறை ஆட்டியை அணுகக் கூஉய்,
“யாது நீ உற்ற இடர்? ஈது என்?” என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி,
“இப் பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி,
கைப் பொருள் தந்து, என் கடுந் துயர் களைக’ என
அஞ்சல்! உன்-தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக” என்று, ஆங்கு,
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கையின்,
தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள்-தன் துயர் நீக்கி
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!
பத்தினி
ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
“என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா” என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
“நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை;
ஒழிக, நின் கருத்து” என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்!
இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?’ என வினவ-
"தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி
அடிகள் மாதரிக்கு உரைத்தல்"
150
155
160
தவத்தோர்
அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர் இன்பம் தரும்; அது கேளாய்;
காவிரிப் படப்பைப் பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலமேல் இருந்தருளி,
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்;
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன் மாலையன், தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை;
சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, “ஈங்கு
யாது இவன் வரவு?” என, இறையோன் கூறும்:
“எட்டி
சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி,
எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, ‘நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தீ!’ என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்,
தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
‘தீது அறுக’ என்றே செய்தனள்: ஆதலின்,
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்,
உத்தர-கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி;
பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண்-நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன்: ஆதலின்,
‘பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு’ என,
பண்டைப் பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; ‘கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன்” என்றலும்-
"கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’
எனல்"
195
சாரணர்
கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்,
இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக’ என்றே கவுந்தி கூற-