அன்றுதொட்டு,
பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு-நோயும் குருவும் தொடர, கொற்கையில்
இருந்த வெற்றிவேல் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்கொன்று, கள-வேள்வியால்
விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது.
அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி-பீடிகைக் கோட்டம்
முந்துறுத்து-ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி,
பிழையா விளையுள் நாடு ஆயிற்று.
அது கேட்டு, சோழன் பெருங்கிள்ளி கோழிஅகத்து, ‘எத்திறத்தானும் வரம் தரும் இவள்
ஓர் பத்தினிக் கடவுள் ஆகும்’ என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து, நித்தல்
விழா அணி நிகழ்வித்தோனே.