செந் நிறப்
பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி,
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;
(உரைசால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப்
பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்:
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
‘கொள்’ எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு
நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன்
சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,)
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக்
கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-
கோமுறை
பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின்,
யாம் முறை போவது இயல்பு அன்றோ?’ என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நால் பால் பூதமும் பால்பால் பெயர-
கூல மறுகும்,
கொடித் தேர் வீதியும்,
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
[உரக் குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்]
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட-
எண்-நான்கு
இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல்,
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
‘எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ் ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்’ என்ன-