Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

"வாழ்த்தும் வணக்கமும்"






5




10
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

"புகார்ச் சிறப்பு"



15




20
ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,

"கண்ணகியின் குலமும் நலமும்"




25
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

"கோவலனது பெருநலம்"
30





35
ஆங்கு,
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்,  
மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ.
 

"திருமணச் செய்தியை அறிவித்தல்"

40
அவரை,
இரு பெரும் குரவரும், ஒரு பெரு நாளால்,
மண அணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணி இழையார், மேல் இரீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மணம்.

"கோவலன் கண்ணகி திருமணம்"


45






50

அவ்வழி,
முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!

"மங்கல வாழ்த்தும் மங்கல அமளியில் ஏற்றுதலும்"



55




60




65
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்,
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்’ எனவே.