சுரும்பு
உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:
‘குழவித்
திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
"கண்ணகியை அணிசெய்வித்தலும் வேண்டுமோ என்று கோவலன் கூறுதல்"
65
70
நறு மலர்க்
கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்,
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நான நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
வார் ஒலி
கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு - அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின் -
காண் தகு சிறப்பின் கண்ணகி - தனக்கு - என்.