விரி கதிர்
பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?’ என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள்
முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-
தாழ்
துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு
மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென -
இளையர் ஆயினும் பகை
அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையின் திரியாது பால் கதிர் பரப்பி,
மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
புள் வாய் முரசமொடு,
பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் -
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சார்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.
கூடினார்பால்
நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.