ஆகவே, பல பாடல்கள் வஞ்சினம் கூறுவது போல, ‘அதனை நான்
அறிந்திருப்பேனேயானால் இன்னஇன்ன பாவத்தைச் செய்தவர்கள் போகின்ற
நரகத்திற்குப் போவேனாகவும், ’ எனப் பரதன்பேசும்போது கோசலை
பதறிவிடுகின்றாள். ‘இவ்வளவு தூய மனம் படைத்தவனையா நாம்
சந்தேகப்பட்டுவிட்டோம்’ என்று நினைக்கின்றாள்.
எனவே, பரதனைப் பொறுத்தமட்டில் ஒரு புதுமை என்னவென்றால்
பெற்ற தந்தையாகிய தசரதன்பரதனை அறியவில்லை; பெற்ற தாயாகிய
கைகேயி அவனை அறியவில்லை; வளர்த்ததாயாகிய கோசலைகூடமுதலில்
அவனை நன்கு அறிந்துகொள்ளவில்லை; உடன்விளந்தவனாகிய இலக்குவனும்
அவனை அறிந்து கொள்ளவில்லை. இலக்குவனைப் பொறுத்தமட்டிலும்
எல்லையற்ற கோபம் உடையவனாய், பரதனை வெறுக்கின்றவனாய்,
குகனுடைய மனத்தில்கூட தன்னுடைய முரண்பட்ட கருத்தைப்
புகுத்துபவனாகத்தான் இருக்கின்றான். இந்தநிலையில் கூட்டுக்குள் வாழும்
பறவை போன்று பரதன் வாழ்கிறான். ஆக புதிரான அந்தப் பாத்திரத்தை
உள்ளபடி எடைபோட்டவர்கள் விசுவாமித்திரனும் இராகவனும் ஆவர்.
இனி அரசவையைக் கூட்டிய முறையில் வசிட்டன், ‘நீ பட்டத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லும்போது பரதன்
துடித்துவிடுகின்றான்.
‘மாபெரும் தவறு இழைத்துவிட்டார் தந்தை. அதைப் போக்கி
மன்னரைக் கொணர்வதற்காக நான்கானம் போகின்றோன்’ என்று
சொல்லும்போது பரதனிடத்தில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்க்காத
புதுமை தோன்றுவதைக் கண்டு அனைவரும் வியப்படைகின்றனர்.
பரதன் பட்டத்தை ஏற்றுக்கொள்வானா, மாட்டானா என்ற
ஐயத்தில்தான் மக்கள் இருந்தார்களேதவிர, இப்படி ஒரு வழியில் ‘நான்
கானகம் சென்று அண்ணனை அழைத்துவரப் போகின்றேன். "எல்லோரும்
புறப்படுக" என்று ஆணையிடுகின்ற அளவுக்கு அவன் போவான் என்று
யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவன் இந்த முடிவுக்கு
வந்தபோது அயோத்