என்று. இதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றான் இராகவன். எல்லையற்ற அன்பினால் மூண்டதுதான் இந்தச் சினம். இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நடைபெற்றுவிட்ட செயலின் அடித்தளம் எங்கே இருக்கிறது. அதனுடைய ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பதைத்தன் முன்கோபம் காரணமாக இலக்குவன் அறிந்துகொள்ள மறுக்கிறான். இந்த அளவில் மேலேஇருக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து அதனைச் செய்கின்றவர் மேல் சினங்கொள்கிறான். எய்தவன்இருக்க அம்பை நோவது போல், கைகேயி, பரதன் ஆகிய இருவர் மீதும் சீற்றம் கொள்கிறான். இதன் மூலக்காரணம் எங்கே உள்ளது என்பதைப்பற்றி அவன் கவலைப்படவேயில்லை. இராகவன் தன் கூர்த்தமதியால் அதனை எடுத்துச் சொன்னபோதும் இலக்குவன் ஏற்றுக்கொள்ளத்தயாராய் இல்லை. ஆகவே, இறுதியாக இலக்குவனை அடக்குவதற்கு இராகவன் ஏவுகின்ற பிரம்மாஸ்திரம் வியப்புக்குரியதாகும். "நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்"(கம்பன் 1741) ‘தந்தையின் சொல்லைக் கேட்பது எனது கடமை. என் சொல்லைக் கேட்பது உனது கடமை. என்சொல்லை மீறினால் அதனால் உனக்கு வரப்போகின்ற இலாபம் என்ன?" என்று சொன்னவுடனே கொதித்துப்பொங்கி வருகின்ற பாலில் ஒருசொட்டுத் தண்ணீர் விட்டவுடன் எப்படி அடங்கிவிடுகின்றதோ அதுபோல இலக்குவன் சீற்றம் எல்லாம் அடங்கிவிடுவதைக் காண்கின்றோம். ஆகவே, இராகவனுடைய ஒரு சொல்லுக்கு, இலக்குவன் தன் வாழ்க்கையையே, தன் எண்ணத்தையே,தான் கொண்டிருந்த குறிக்கோளையே பலியாக்கிவிடுகிறான் என்றால் இராமன் மாட்டு அவன் கொண்டிருந்த மாபெரும் அன்பை எடுத்துக்காட்ட கவிச்சக்கரவர்த்தி இதனைப் பயன்படுத்துகின்றார். இத்துணை பேராற்றலும், பெருஞ்சினமும் உடையவனாகிய இலக்குவன் இராமனின் நிழல்போல்உறைந்தவன் என்பதை அனைவரும் அறிவர். என்றாலும் யமுனை ஆற்றில், குகன் முதலானவர்களுடைய உதவிஎதுவும் இல்லாத நிலையில், மூங்கில் கழிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, மாணைக்கொடியால், |