தெப்பமாகக் கட்டி அதில் பிராட்டியையும், பெருமானையும் ஏற்றிவைத்து அக்கரைக்குத் தன்னிருகையால் இழுத்துக்கொண்டு நீந்திப் போகிறான். அதைப் பார்த்து இராகவன் தழுதழுத்துவிடுகின்றான். அக்கரைக்குச் சென்றால் அங்கே ஒரு தவச்சாலை, பிராட்டியும் பெருமானும் தங்குவதற்குத் தயாராய்இருக்கிறது. இலக்குவனால் கட்டப்பட்டிருந்த அந்தத் தவச்சாலையைப் பார்த்த இராகவன் தம்பியைஏற இறங்கப் பார்த்து, "என்று கற்றனை நீ இதுபோல்" (2096) "தம்பி, ஒரு வினாடிகூட என்னை விட்டுப் பிரிந்தவன் இல்லையே நீ. எங்குக் கற்றாய்இதனை" என்று இராகவன் தழுதழுத்துப் பேசுகின்றபோது அண்ணன் தம்பியிடையே இருக்கின்ற எல்லையற்றஅன்பின் பரிமாணத்தைக் காணமுடிகின்றது. மிதிலையர் கோன் மகள் பாதம் காட்டில் நடந்தன; குற்றமே இல்லாத என்தம்பியின் கைஇந்தத் தவச்சாலையை அமைத்தன. ஒன்றுமே இல்லாதவற்கு கிட்டாத பொருள் இல்லை என்று இராகவன்பேசுகின்றான். ‘மேவு கானம் மிதிலையர் கோன் மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன தா இல் எம்பி கை சாலை சமைத்தன யாவை யாதும் இலார்க்கு இயையாதவே’ (2095) இராமானுஜனாகிய இலக்குவன் பற்றி இராமன் என்ன நினைக்கிறான் என்பதை அயோத்தியா காண்டத்தில்நன்கு அறிய முடிகிறது. ஆகவே, எப்படிப் பார்த்தாலும் இராம காதையின்கருமுழுவதும் அயோத்தியா காண்டத்தில் அடங்கியிருக்கிறது என்பதும் அதில் வருகின்ற பாத்திரங்கள்அனைத்தும் ஈடு இணையற்ற முறையில் படைக்கப்பட்டுள்ளன என்பதும் காணக் கிடக்கின்றன. இந்தக் காண்டத்திலேயே உயிர்நீத்துவிடுகின்ற தசரதன், தன்செயலை முடித்துக்கொண்டுமறைந்துவிடுகின்ற கூனி, யாரும் எதிர் பாராத முறையில் புதிய திருப்பங்களை உண்டாக்கி உலகம்முழுவதும் பழி சொல்லும் என அறிந்திருந்தும், பழிகளை எல்லாம் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு தான் எது நியாயம் என்று நினைத்தாளோ அந்த நியாயத்திற்காகப் போராடி இறதிவரை கல்தூண்போல்நிற்கின்ற ஞானியாகிய கைகேயி, அவள் |