டாலெனக் கொடுமனக் கூனி தோன்றினாள் என்று தற்குறிப்பேற்றம் படக் கூறிவிட்டானோ என்றுகருதத் தோன்றுகிறது. தூய சிந்தையளாகிய கைகேயியின் உள்ளத்தைத் தெருட்டித் தன் கணவன் உயிர் துறக்கவும், தனக்கு உயிர்க்குயிரான இராமனை முடிதுறந்து காடேகவும், செய்யுமளவுக்கு அவள் சிந்தையைத் திரித்தல்ஒரு செயற்கரிய செயல். பின்னர்ப் பலர் முயன்றும் கைகேயியின் மனத்தை மீண்டும் மாற்ற இயலவில்லைஎன்பதே மந்தரை செயற்கரிய செய்தவள் என்பதை எதிர்மறையில் மெய்ப்பிக்கிறது. இவ்வாறு பிறரால்செய்யவியலாத அருஞ்செயல் புரிவோரை மானுட நிலையில் இருந்து (ஊர், பெயர், பிறப்பு போன்றனதெரிந்தாலும்) விலக்கி அவர்க்கு மீமானுடப் பண்பு கற்பித்தல் என்பது உலக இலக்கியங்கள்பலவற்றிலும் காணப்படும் இடைக்காலப் பண்பாட்டுக் கூறாகக் காணப்படுவதை இங்கே நினைந்துபார்க்கலாம். 1.3.2. மந்தரையின் பகைமை மந்தரையாகிய கூனி இராமனின் பட்டாபிஷேகச் செய்தியைக் கேள்வியுற்றதும் அதைத் தடுக்கக்கருதிக் கைகேயியிடம் செல்லுகிறாள். இராமன்மீது அவள் கொண்ட பகைமைக்குப் பல்வேறு காரணங்களை இராமாயண நூல்கள் கூறக் காண்கிறோம். வான்மீகம் தீவினைகளில் ஆர்வமுடைய மந்தரை (பாபதர்ஷிணி-II. 7-13) பேச்சில் மிகவும் வல்லமையுடையவளான மந்தரை (வாக்கிய விஷாரதா-II. 7.18) இராமனது நன்மைக்கு இடையூறாயிருக்கின்றவள் (II. 9.4, 10) சம்பராசூரனிடத்தில் இருந்த மாயைகளை விட அதிகமான மாயைகளில் வல்லவள். இராஜ்ய விவகாரங்களில் நுட்பமும் ஞானமும் உடையவள். இவையே அவளுடைய கூனாக உருவெடுத்து நீண்டு பருத்துத் தேரின் கோணம் போன்று விளங்குகிறது. (II. 9.45, 46) கூனியாகிய பெரிய முதலை. (II. 59) |