76

நோக்கமோ காரணமாகக் காட்டப்படாமல் மந்தரையின் காதலாகிய தன்னலம்
அவள் சூழ்ச்சிக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது.  வேறெந்த இராமாயண
நூலும் மந்தரையை இக்கோணத்தில் படைத்துக் காட்டவில்லை.

1.3.3. மந்தரையின் சூழ்ச்சி

     கைகேயியின் மனத்தை இராமனுக்கு எதிராகத் திரிக்க விரும்பிய
மந்தரை அவளுக்குக் கூறும்தீய அறிவுரைகளை எல்லா ராமாயண
நூல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகக் கூறுகின்றன.  இராமன்
முடிசூடுவதால்பரதனுக்கு ஏற்படும் இழப்பையும் இழிவையும் கைகேயிக்கு
ஏற்படவிருக்கும் இழிவுகளையும்  மந்தரைபலபட விரித்துரைப்பதாகப்
பொதுவாக எல்லா இராமாயண நூல்களும் கூறுகின்றன.

     கோசலை அரசனின் தாய் என்னும் பெருமை பெற்று உன்னையும்
உன்  தாதியரையும் அடிமைகளாக நடத்துவாள்.ஏனெனில்,  தசரதன் பிற
மனைவியரைவிட உன்னிடத்தில் அதிக ஆசை கொண்டவனாக இருக்கிறான்
என்ற காரணத்தினால் செருக்கடைந்து இராமன் தாயாகிய கோசலையை
நீயே பலமுறை அவமதித்திருக்கிறாய்.அவ்வாறு அவமதிக்கப்பட்டவள்
வாய்ப்பேற்பட்டால் உன்னைப் பழிவாங்காதிருப்பாளா என்று மந்தரை
கூறியதும் கைகேயியின் மனம் மாறியதாக வான்மீகம் காட்டுகிறது. (II. 8.37,
38) தனக்குமறுநாள் முடிசூட்டப்போவதாகத் தசரதன் முடிவு செய்துள்ளான்
என்னும் செய்தியை இராமன் சொல்லக்கேட்டவுடன் கோசலை இதுதான்
நானும் வெகு நாளாக உள்ளத்தே கருதியிருந்த மனோரதம் எனக் கூறி
ஆனந்தக் கண்ணீர் சொரிய நின்று தன்மகனைப் பார்த்துக், "குழந்தாய், நீ
நீடூழி வாழ்க, உனக்கு இடையூறு செய்ய விரும்புபவர்களின் மனோரதம்
நிறைவேறாமற் போகட்டும்.  நீ ராஜ்யலட்சுமியுடன்புகழ்பெற்று விளங்கி
எப்போதும் என் உறவினர்களையும் சுமித்திரையின் சுற்றத்தார்களையும்
மகிழ்ச்சியுடன்இருக்கச் செய்வாயாக"  (II.  4.38, 39)  என வான்மீகம்
கூறுவது மந்தரையின் வாதத்தோடு இணைத்துச்சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

     மகனுக்கு வரும் இழப்பையும் இழிவையும் கூறியபோதும்
இராமனிடத்திலுள்ள நல்லெண்ணத்தைக் கைவிடாதகைகேயி தன் மாற்றாள்
‘அரசமாதா'  என்னும் பெரும் பதவியடைவாள் என்றும் தன்னைப்
பழிவாங்குவாள்என்றும் கூறப்பெற்றதும் உடனே மனமாற்றம்
அடைந்துவிடுகிறாள் என்று காட்டி உளவியல் நுட்பம் அறிந்துசெயல்பட்ட
மந்தரையின் அறிவுக்கூர்மையைக் கவிஞர் நன்கு வெளிப்படுத்துகிறார்.