மாற்றாளின் ஏற்றத்தையும் அதனால் ஏற்படும் கைகேயியின் இழிவையும் எடுத்துரைக்கும் நிலையில் சில கவிஞர்கள் வேறுபடக் காண்கிறோம். காதல் உன்பெருங் கணவனை அஞ்சிஅக் கனிவாய்ச் சீதை தந்தைஉன் தாதையைத் தெறுகிலன்; இராமன் மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வுஇனி உண்டோ? பேதை உன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார்? (II. 2.82) மற்றும் நுந்தைக்கு வான்பகை பெரிதுள; மறத்தார் செற்ற போதுஇவர் சென்று உதவார்எனில் செருவில் கொற்றம் என்பது ஒன்று எவ் வழிஉண்டு அதுகூறாய் சுற்ற மும்கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய். (83) என்னும் கம்பன் வாக்கில் கூனி கைகேயியின் வரப்போகும் இழிவை மட்டும் குறிப்பிடவில்லை. அவளுடைய மதியிலாத் தனத்தால் கைகேயியின் தந்தைக்கு வரப்போகும் ஆபத்தையும் குறிப்பிட்டுக்காட்டுகிறாள். மனைவியர் தம்மை இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வர். ஆனால், தம் பெற்றோர், தமையன்மார் பற்றித் தம் புகுந்த வீட்டார் ஒரு சிறுகுறை கூறினாலும் பொறுக்காமல் வெகுண்டுஎழுவர் என்னும் உளவியல் நுட்பத்தைக் கையாண்டு, கைகேயியின் மெத்தனத்தால் அவளுடைய தந்தையின்வாழ்வே முடியப் போகிறது என்று மந்தரை எடுத்துக் காட்டுவதாகக் கம்பன் காட்டுவது உன்னி உன்னிமகிழத்தக்கது. இதைக் கேட்ட பிறகுதான் ‘தேவியின் தூய சிந்தையும் திரிந்தது’ என்று வருந்துகிறான் கவிஞன். அத்யாத்ம ராமாயணம், ரங்கநாதம், பாஸ்கரம் என்னும் இரு தெலுங்கு ராமாயணங்கள், கன்னடதொரவே ராமாயணம், துளசி ராமாயணம் ஆகிய யாவும் இவ்வகையில் வான்மீகத்தை ஒத்தே செல்கின்றன. இனிப் பரதன் இச்சமயத்தில் அயோத்தியில் இல்லாமை குறித்து வான்மீக மந்தரை கூறும் ஒருமுரண்பட்ட கருத்து ஆய்வுக்குரியதாக அமைகிறது. துஷ்டாத்மாவாகிய தசரதர் பரதனை உன் தாய்வீட்டிற்கு அனுப்பிவிட்டு இடையீறில்லாதஅரசபதவியில் இராமனை நிலையாக அமர்த்தப் போகிறார் என்று முதலில் கூறியவள் (II. 7.26) பின்னர்ப் பரதனோ களங்கமில்லாத சிறுவன்; நீ தான் அவனை மாமன் வீட்டிற்கு அனுப்பிருக்கிறாய் (II. 8.28) என்று கைகேயியே பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பியதாக மந்தரை கூறுகிறாள். |