78

     பால காண்ட இறுதியில் கேகய மன்னன் பரதனை அழைத்து வருமாறு
தூதர்களை அனுப்பியதால்,  தசரதன் அவனைப் பாட்டன் வீட்டிற்கு
மாமனுடன் அனுப்பியதாக வான்மீகி கூறுகிறார்.  இதனை உள்நோக்கத்துடன்
தசரதன் செய்தான் என்று முதலிற் கூறிய மந்தரை சற்று நேரம் பொறுத்து, 
‘நீயே அவனை அனுப்பி வைத்தாய்’என்று கைகேயி மீதே ஏற்றிக்
கூறுவதன்  பொருத்தமும் பொருளும் விளங்கவில்லை.  மந்தரையின்
வஞ்சனைப்பொய்ம்மையைக் காட்ட கவிஞர் இவ்வாறு கூறுகிறாரா அன்றிப்
பாடபேதமா என்று அறிய இயலவில்லை.

     மிதிலையிலிருந்து அயோத்தி மீண்ட பின்னர் ஒருநாள் தசரதன்
பரதனை அழைத்து,  ‘ஐய நினது மூதாதை நின்னைக் காணிய விருப்பினன்
என்று ஆணை வந்துள்ளது.  ஆதலால்,  நீ கேகயம் போவாயாக என்று
கூறவே (I.23.47) அவனும் இராமனிடம் விடைபெற்று உதாசித்து என்னும் மாமனுடன் கேகய நாடு சென்றடைந்தான் என்று (I.23.49) கம்ப ராமாயணம்
கூறுகிறது. இச்செய்தியையே, ‘அன்றைக்கு, அரசன்ஆணையால், பரதனை
அவசரமாக நெடுந்தூரத்தில் உள்ள கேகய நாட்டிற்கு அனுப்பியதன்
பொருள் இன்றுதான்எனக்கு விளங்குகிறது என்று மந்தரை தசரதனே
பரதனை வேண்டுமென்றே அனுப்பிவைத்தான் என்று திரித்துக்கூறுகிறாள் 
(II. 2.67). வான்மீகத்துடன் ஒத்திருக்கும் இக்கருத்தையே அத்யாத்மம், 
ரங்கநாதம், பாஸ்கரம்,  எழுத்தச்சன் ராமாயணம்,  தொரவெ
ராமாயணம் ஆகிய காப்பியங்களும் கூறுகின்றன.

     பட்டாபிஷேகத்திற்கான பணிகள் சென்ற பதினைந்து நாட்களாக நடந்து
வருகின்றன.  ஆனால், நான் வந்து இன்று சொல்லும் வரைக்கும் உனக்குத்
தெரியவில்லையே.  நீ அறியாத வேறு ஒன்றையும்நான் உனக்கு இப்போது
கூறுகிறேன். இராமனின் தாய் கோசலையின் ஆலோசனைப்படிதான் தசரதன்
பரதனைக் கேகய நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளான் என்று துளசி தாசரின்
மந்தரை கூறுகிறாள்  (II.18.1).  இங்கே பரதனைப் பாட்டனார் வீட்டிற்கு
அனுப்பிய பழியைக் கோசலை மீது ஏற்றிக் கூறுகிறாள்மந்தரை. அத்துடன்
நிற்காமல் சக்களத்தியரால் மனைவியர் பட்ட துன்பங்களை விளக்க நூற்றுக்
கணக்கான கதைகளைக் கூறிக் கைகேயியின் பொறாமைத் தீயை நெய்யூற்றி
வளர்த்தாள் என்றும்(II.18) கூறுவதால் துளசிதாசர் சக்களத்தியரின் உளவியல்
உணர்ந்து கைகேயியின் மனமாற்றத்தைவிரைவுபடுத்தவும்,  உறுதிப்படுத்தவும்
கருதி இம்மாற்றத்தைச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

     ஆகப் பரதனின் பாட்டனாரது விருப்பத்தின் பேரில் தசரதன் அவனை
அனுப்பினான் எனவும், இராமனின்பட்டாபிஷேகம்