இராமன் எந்தவித மாற்றமும் தராமல் அரசன் கட்டளை என்று கருதித் தன் அரண்மனைக்குத் திரும்புகிறான்என்பது வான்மீகம்.(II.3.) "மாமுடி புனைந்து நல்லறம் புரக்க, யான் நின்வயின் வேண்டுவது" என்று தசரதன் அரசவையிலேயேஇராமனிடம் கூறுகிறான். இதனைக் கேட்ட இராமன், காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தும் யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றோ நீதி எற்கு என நினைந்தும்அப்பணிதலை நின்றான். (2.1.69) என்று கம்பன்காட்டுகிறான். அத்யாத்ம ராமாயணத்தில் வசிட்டன் இராமனிடம் வந்து, ‘தசரதன் நாளைய தினம்உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்போவதாக அறிவிக்கும்படி உன்னிடம் என்னை அனுப்பினான்’ என்றுகூறுகிறான். (II.2) இதனைக்கேட்ட இராமன் புன்முறுவல் பூத்தவனாய் அருகிலிருந்த இலக்குவனைப்பார்த்து, இலக்குவ, நாளையதினம் காலை எனக்கு இராஜ்ய பட்டாபிடேகம் நடக்கப் போகிறதாம்; நான் காரணமாக மட்டிலும் இருப்பவன், அனுபவிக்கிறவன் நீதான். ஏனெனில் நீ எனக்கு வெளியில் சஞ்சரிக்கும் பிராணன்35 என்று கூறி வசிட்டன் ஆணைப்படி நோன்புகளியற்றத் தொடங்கினான். நாளை அரசன் உனக்கு இளவரசுப் பட்டம் கட்ட விரும்புகிறான். இந்த நிகழ்ச்சி இனிது நிறைவேறத்தக்க நோன்புகளை நீ இன்று மேற்கொள்ள வேண்டும் என வசிட்டன் இராமனிடம் கூறுகிறான். அதனைக்கேட்ட இராமன் மனச் சஞ்சலம் அடைந்தவனாய்ப் பின்வருமாறு சிந்திக்கலானான்: நாங்கள் நால்வரும் ஒன்றாகப் பிறந்தோம்; ஒன்றாகவே உண்டோம்; உறங்கினோம்;விளையாடினோம்; ஒன்றாகத் திருமணம் செய்துகொண்டோம். காதணி விழா, பூணூல் அணிதல் போன்ற எல்லாச் சடங்குகளும் ஒன்றாகவே நடந்தன இப்படிப்பட்ட குற்றமற்ற குலத்தில், மூத்தோன் என்பதால்உடன்பிறந்தோரைத் தவிர்த்துவிட்டு, நான் மட்டும் முடிசூட்டிக் கொள்ளும் தகாத காரியம் நடக்கப் போகிறது. |
35. நடேச சாஸ்திரி, ப. 58 |