இருவரங்களைக் கூறினாள். வரங்களின் வரலாறும் விவரமும் கேட்ட இராமன், ‘அம்மையே, பரதனே நாடாளட்டும்; நான் தண்டகாரணியம் செல்கிறேன். தந்தை இதை என்னிடம் சொன்னால் உடனே செய்திருப்பேனே, ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்றான். இராமன் குரல்கேட்டு உணர்வு திரும்பிய தசரத மன்னன், "இரகு நந்தன, நான் பெண்ணால் வெல்லப்பட்டவன்;தீய வழியில் நடப்பவன். எனவே என்னை அடக்கிவிட்டு நீ இந்த நாட்டைக் கைப்பற்றிஆள்வாயாக. உனக்கு அதனால் பாவமில்லை. என்னை மட்டுமே வாய்மை தவறிய குற்றம் தொடரும், என்னை விட்டுப் பிரிந்து பயங்கரமான காடு செல்ல நீ விரும்புவது ஏன்" என்று வாய்விட்டுப்புலம்பிக் கதறினார். இதனைக் கேட்டு மனம் நொந்த இராமன், "பிதாவே, பரதன் நாடாளட்டும். நான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். மேலும், தங்களுடைய சத்தியத்தைக் காப்பாற்றியதுமாகும்" என்று ஆறுதல் கூறிவிட்டு இலக்குவனுடன் கோசலை கோயில் நோக்கிச் சென்றான்.(II. 3. நடேச சாஸ்திரி, பக். 70-71). தெலுகுராமாயணங்களான ரங்கநாதமும், பாஸ்கரமும் வான்மீகத்தைப் பின்பற்றிச்செல்கின்றன. மொல்ல ராமாயணத்தில் கைகேயியின் ஆணையைச் சுமந்திரன் இராமனுக்குக் கூறுகிறான். இராமன் பதிலேதும் கூறாமல் அவன் கட்டளைப்படி காட்டிற்குச் செல்லப் புறப்படுகிறான். கன்னட தொரெவெ இராமாயணத்தில் சுமந்திரனால் அழைக்கப்பெற்ற இராமன்சீதையுடனும், இலக்குவனுடனும் முடிசூடுவதற்குரிய அலங்காரத்துடன் அரசனிருக்கும் இடம் சென்றான். அங்கே இருந்த சோகச் சூழலை உணர்ந்த இராமன் தந்தைக்கு ஏதோ நேர்ந்தது என்று கருதி அவனைக்கண்டு வணங்கினான். அப்போது தசரதன், ‘இராமா, கேள் நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றுநினைத்தது. இந்த நிலைக்குக் கைகேயிதான் காரணம்’ என்று கூறி மேலே பேச இயலாமல் மூர்ச்சை அடைந்தான். பின்னர் ஒருவாறு தெளிந்து சுமந்திரனைப் பார்த்துச் "சம்பராசூரன் சண்டையில்கொடுத்த இரண்டு வரங்களாகிய இரு கத்திகளைக் கொண்டு என் கழுத்தை அறுத்துவிட்டாள் கைகேயி"என்றான். இதைக் கேட்ட கைகேயி ‘முன்பு கொடுத்த வரங்களைக் கேட்டதால் தசரதன் வருந்துகிறார். வரம் ஒன்றால் பரதனுக்கு நாட்டு அரசு; மற்றொன்றால் இராமனுக்குக் காட்டுஅரசு தர வேண்டும் என்று வேண்டினேன். இதைக் கேட்டதால் எனக்கு அபகீர்த்தி வந்தது’ என்றாள். (II. 39, 40) |