கைகேயி மேலும் தொடர்ந்து, "மனுவழி வந்தோர் வாய்மை தவறார் என்று நான் நினைத்தேன். இப்போது அரசர் மனம் வருந்துவதால் சத்தியத்தை மீறி நடக்க விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ரகுராமனுக்கே பட்டம் கட்டுங்கள். ததீசி, சிபி போன்ற அரசனல்லான் தசரதன், மந்திரியாரே வெறும் பேச்சால் என்ன பயன்? எனக்கு எதற்கு அரசு? தசரதனை எழுப்பி இராமனுக்கே முடி சூட்டுங்கள்" என்று கூறினாள். (II-41, 42) அப்போது இராமன் கைகேயியை நோக்கி, "நீங்கள் கேட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயமில்லை.தந்தையார் மொழிப்படியே நான் நடந்து கொள்வேன் என்று வாக்குறுதி தருகிறேன். நம் இரகுவம்சஅரசர்கள் எல்லாம் சத்தியம் தவறாதவர்கள் என்ற கூற்றை நீங்கள் மெய்ப்பித்துவிட்டீர்கள். பரதன் அரசாளட்டும். நான் காடு செல்கிறேன். உரிய காலம் ஆனதும் நான் திரும்பி வருகிறேன்" என்று வாக்குறுதி செய்தான். (II. 49, 50) மலையாளகன்னச ராமாயணத்தில் தசரதன் முதலியோர் குழுமியிருந்த அவைக்குச் சென்றஇராமனை நோக்கிக் கைகேயி தான் பெற்ற வரங்கள் பற்றிக் கூறுகிறாள். வருத்தம் என்பதே இல்லாதமுகத்தனாய இராமன், "நான் இதுபற்றி வருந்தவில்லை. பரதன் நாடாளட்டும்; நான் இப்போதே காடு செல்கிறேன். ஆனால், தந்தையார் ஏன் இதை என்னிடம் கூறவில்லை? அவர் என்னசொன்னாலும் நான் அதன்படி நடக்கத் தயாராக உள்ளேன்" என்று கூறக் கைகேயி, "மன்னர் மிகவும்விசனமுற்று உள்ளதால், உன்முகம் பார்த்து இதைக் கூறும் துணிவில்லாமல் இருக்கிறார்." என்றுவிடையிறுத்தாள். உடனே சற்றும் தயக்கமில்லாத மனத்தனாகிய இராமன் "அப்படியானால் சரி; அரசர் ஆணையிடாவிட்டாலும் உங்கள் நன்மைக்காக நான் இப்போதே காடு செல்கிறேன்" என்றுகூறினான். எழுத்தச்சன் இராமாயணம் அத்யாத்மத்தையொட்டி இந்நிகழ்ச்சியைக் கூறுகிறது. மன்னவன் பணியாகக் கைகேயி தான் பெற்ற வரங்களைக் கூறக் கேட்டதும், மின்னு பத்மம் போலுமுகம் வென்றது அப்போது அம்மலரை வன்னுகப் பூண் கழற்றிவிட்ட வல்லேறுபோல் மகிழ்ந்தான் என்னதன்றோ தம்பிசெல்வம் என்றுகைகை தனைப்பணிந்து மன்னனையும் திசைநோக்கி வணங்கி நற்றாய் கோயில் புக்கான். என்று இராமன் மனநிலையைக் கம்பன் வழிநின்று காட்டுகிறது தக்கை ராமாயணம் (II. 3.25). |