15

அயோத்தியா காண்டம் - முன்னுரை
பேரா. அ.ச. ஞானசம்பந்தன்

     கம்பனுடைய இராம காதையில் இரண்டாவதாக அமைந்துள்ளது
அயோத்தியா  காண்டமாகும். இராமகாதையின் வளர்ச்சி  முழுவதற்கும்
உள்ள கருவைத் தாங்கி நிற்பது அயோத்தியா காண்டமாகும்.

     இந்தக் காண்டம்  ‘மந்திரப் படல’த்தில் தொடங்கி,  ‘திருவடி சூட்டு
படல’த்தில்முடிகின்றது. கதைப் போக்கில் இந்தப் பெயர்கள்
அமைந்திருந்தாலும், கதையை மறந்துவிட்டுப் பெயர்களைமட்டும் எடுத்துக்
கொண்டால்கூட, ஒரு புதுமையான சிந்தனையைத் தோற்றுவிக்கின்றது. 
‘மந்திரத்தில்தொடங்கினால் திருவடி சூடலில் முடியும்’ என்ற எண்ணத்தை
நம்முடைய மனத்தில்தோற்றுவிப்பது போல இந்தப் படலங்களின் பெயர்கள்
அமைந்திருக்கின்றன.

     அயோத்தியா காண்டத்தில் ‘பாத்திரங்கள்’ என்று சொல்லப்படுபவை
மிகக்  குறைவானவையேயாகும்.‘தசரதன், கூனி, கைகேயி, பரதன்’  என்ற
நான்கு பாத்திரங்கள்தாம் இக் காண்டம் முழுவதும்அடைத்துக்
கொண்டிருக்கின்றன. இடையில் ‘குகன்’ வருகின்றான். அவனும் மிக
முக்கியமான  பாத்திரம்தான்என்பதில் ஐயமில்லை.  ஆக இந்த ஐந்து
பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மிகப் பெரியஅயோத்தியா
காண்டம் நடைபெறுகின்றது.

     கம்பனைப் பொறுத்தமட்டில் மூலநூலிலுள்ள ‘கன்யா சுல்கக் கதையை
முழுவதுமாக  மறைத்துவிட்டான்.தசரதன் கைகேயியைத் திருமணம் 
செய்துகொள்ளும்பொழுது,  ‘உன்னுடைய வயிற்றில் பிறக்கும் மகனுக்குப்
பட்டத்தைத் தருகிறேன்’  என்று அவளிடம் அப்போது சொல்லியிருக்கிறான். 
அதனை இப்போது கையேகி நினைவூட்டுகின்ற நிலையில் இருக்கிறாள். 
அவன் வாய்மை தவறி விடாதிருக்க,  ‘ஏற்கெனவே நீ அப்படிச்
சொல்லியிருக்கிறாயே’, என்று சொல்லிக் காட்டாமல்,  வரமாகப்
பெற்றுக்கொள்ளுகின்ற  முறையில், தசரதனை ஒரு பெரிய இக்கட்டில்
இருந்து கைகேயி காப்பாற்றுகிறாள் என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.