பதிகம்






5

குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு
அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
கட்புலங் காண விட்புலம் போயது
இறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென



1
உரை
9

       குணவாயில் கோட்டத்து - திருக்குணவாயில் என்னும் ஊரிலுள்ள கோயிற்கண்ணே, அரசு துறந்து இருந்த - அரச போகத்தைத் துறந்து தவவுருத் தாங்கியிருந்த, குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு - குடதிசைக் கோவாகிய செங் குட்டுவன் என்னுஞ் சேரற்கு இளங்கோவாகிய அடிகட்கு, குன்றக் குறவர் ஒருங்கு உடன் கூடி - மலையில் வாழும் குறவ, ரெல்லாரும் திரண்டு சென்று, பொலம்பூ வேங்கை நலம் கிளர கொழுநிழல் - பொன் போலும் பூவினையுடைய வேங்கைமரத் தின் நன்மை மிக்க கொழுவிய நிழற்கண்ணே, ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு - ஒரு முலையினை இழந்து வந்து நின்றவளாகிய அழகிய பெருமையுடைய ஒருபத்தினியின் பொருட்டு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி - தேவர்க்கரச னாகிய இந்திரன் றமர் நெருங்கி வந்து, அவள் காதல் கொழு நனைக் காட்டி - அவளுடைய காதலையுடைய கணவனை அவட் குக் காட்டி, அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போயது - அவளோடும் அவர் எம் கண்ணாகிய புலம் காண விண்ணினிடத்திலே சென்றது, இறும்பூது போலும் - ஓர் அதி சயமாயிருந்தது, அஃது அறிந்தருள் நீ என - அதனை நீ அறிந் தருள்வாயாக என்றவளவிலே,

       [அடியார்க்கு நல்லார்; குணவாயில் - திருக்குணவாயிலென்பதோரூர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்க ணுள்ளது; அஃது ஆகுபெயர். கோட்டம் - அருகன் கோயில். இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தல் அருமையால் துறந்து என்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்தவிடத்தே மீட்டும் தவவுருத் தாங்கியிருத்த லருமையான் இருந்து என்றும் கூறினார்.

       குன்றக்குறவர் - ஏழுனுருபுத் தொகை; குன்றம் - கொடுங்கோளூர்க்கு அயல தாகிய செங்குன்றென்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின், அவரறி யார்; என்னை? அத் திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக்கண்ணதாய்


      1. சூ.தொல். எழுத் 414

       அறுபதின் காத ஆறுண்டாகலானும், அரசனும் உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க.]

       கோட்டம் என்பது பல கடவுளர் உறையு மிடங்களுக்கும் பெயராகக் கனாத்திறமுரைத்த காதையில் வழங்கி யிருத்தலானும், கோயில் என்பதன் பரியாயமாகக் கொண்டு ஊர்காண் காதையிலும் முருகன் கோயிலைக் கோட்டம் என்று கூறியிருத்தலானும், குமர கோட்டம் முதலிய பெயர் வழக்கினும் இருத்தலானும் ஈண்டுக் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் துணிதல் சாலாது. அடிகள் என்னும் பெயர் பெரும்பாலும் அருக சமயத் துறவிகட்கு வழங்கியதாகு மென்னும் கருத்தால் அடியார்க்கு நல் லார் அருகன் கோயில் என்று கூறினார் போலும்!

       செங்குன்று என்பது கொடுங்கோளூர்க்கு அயலதாகிய மலை யென்றும், திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசையில் அறுபதின் காத வழியில் உள்ளதென்றும் கொங்கு நாட்டினராகிய அப் புலவர் பெருமான் துணிந்து கூறுதலின் கொடுங்கோளூராகிய வஞ்சியையும் செங்குன்றையும் அவர் நன்கறிந்து கூறியுள்ளா ரென்பது பெறப்படும்.

       அரசாட்சி இன்பம் பயப்பதென்பதனை,

       1''தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே''

என்னும் திருக்குறுந்தொகையானும் அறிக. பொலம் - பொன் என் பதன் திரிபு;

       2. ''பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான.''

       என்பது காண்க. 'திருமா பத்தினி இழந்து வந்து நின்றாள்; அவள் பொருட்டு' என விகுதி பிரிது விரித்துரைக்க. தமராவார் தேவர். கட்புலம்- கண்ணினது அறிவு என்றுமாம். போயது - போய அது என்பதன் விகாரமுமாம். போலும், 3 ஒப்பில் போலி. குறவர் கூடிச் சென்று விட்புலம் போயது இறும்பூது என இளங்கோவடி கட்குக் கூறினாராக என்க. இது புதுமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு.


1. திருநா. திருகுறு, திருவிடைம. 2. தொல், எழுத். சூ, 356 3. தொல், சொல், சூ. 278