பதிகம்

10 அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்
யானறி குவன்அது பட்டதென் றுரைப்போன


10
உரை
11

       அவன் உழை இருந்த தண்டமிழ்ச் சாத்தன் - அப் பொழுது அவன்பால் வந்திருந்த தண்டமிழ்ப் புலவனாகிய சாத் தன், யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் - அது விளைந்ததனை யான் அறிகுவன் என்று உரைக்கின்றவன்.

       செங்குட்டுவனைக் கண்டு இளங்கோவடிகள்பால் வந்திருந்த சாத்தன் என்க. சாத்தன் -- மதுரைக் கூலவாணிகன் சாத்தனா ரென் னும் நல்லிசைப் புலவர் என்பது பின்னர்ப் பெறப்படும். சீத்தலைச் சாத்தனார் என்று கூறப்படுபவரும் இவரே யென்பது, 1 தொல்காப் பியச் செய்யுளியல் உரையில் 'சீத்தலைச் சாத்தனாராற் செய்யப் பட்ட மணிமேகலை' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைத்தலால் அறியப்படும். காட்சிக்காதையுள்ளும் ''தண்டமிழாசான் சாத்தன் '' எனவும், ''நன்னூற் புலவன்" எனவும் இவரைப் பாராட்டி யுரைத்தலானும், இக் காப்பியத்தை இவர்முன் கூறிக் கேட்பித்தலானும் இளங்கோவடிகள் இவர்பால் வைத்த பெருமதிப்புப் புலனாகும்.

      'அறிகுவன்' என அன் விகுதி தன்மைக்கண் வந்தது ; மேலும் இங்ஙனம் வருமிடனறிந்து கடைப்பிடிக்க. அது என்றது ஒரு முலை யிழந்ததனை.

      இவ்வடிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரை பதிக இறுதிக் கண் ஆராயப்படும்.

1. தொல். பொருள். சூ. 552--உரை.