பதிகம்

 

அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர்



62
உரை
63

       அவர் மங்கல வாழ்த்துப் பாடலும் - அவர் மணத் தில் மகளிர் வாழ்த்துதலை யுடைய பாடலும்,

      மங்கலம் - கலியாணம். கூறுதற்கு எடுத்துக் கொண்டது கோவலன், கண்ணகி யென்பார் வரலாறாகலின், அவரெனச் சுட்டி யொழிந்தார்.

      [அடி. இதனை மங்கலவாழ்த்துக் காதையு மென்னாது பாடலு மென்றது என்னையோ வெனின்,-- இஃது ஆசிரியப் பாவால் வாராது கொச்சகக் கலியால் வருதலானும், கதையை யுடையது காதையா மாதலானும், அவ்வாறு இதிற் கதை நிகழ்ச்சி யின்மையானும், வாழ்த்தும் உரையும் பாடலுமாய் வருதலானும் இங்ஙனம் பெயர் கொடுத்தாரென வுணர்க. அஃது அற்றாக; மேலும் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ்வரி, வஞ்சின மாலை, குன்றக் குரவை இவையிற்றையும் காதை யென்றிலரா லெனின், -- அவற்றைக் கூறாததும் சில வேறுபாடு கருதிப் போலும்; என்னை வேறுபாடெனின், அவை தத்த முடிவிற் கூறுதும்.]

      ஆசிரியப் பாவால் வாராதது காதை யன்றென்னில், வாழ்த்துக் காதை என்னும் பெயர் பொருந்துவதன்று; அஃது ஆசிரியப் பாவால் இயலாமையின்; ஆகலின், பெரும்பாலும் கதைத் தொடர் புடையது காதை என்பதே அடிகள் கருத்துப் போலும்.