பதிகம்

90 இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.


90
உரை
90

          இது - இங்ஙனங் கூறியவிது,

          பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென் - இச்செய்யு ளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிதற்குக் கருவியாகிய முறைமையுடைய பதிகம் என்க.

          தெரிந்த - தெரிதற்குக் கருவியாகிய என்க. பதிகம் எனினும் பாயிரம் எனினும் ஒக்கும். மரபிற் பதிகம் என மாறுக. என், அசை ; இச்சொல் ஆசிரியப்பாவிற்கு முடிபு சிறப்புடைத்தென்பர்.

          இனி, குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருளென்ற வளவிலே செங்குட்டுவன் அதிசயித்து முகநோக்கப் பரிசில் காரண மாக வந்து அவனுழையிருந்த சாத்தன் அதனைக் குறிப்பானறிந்து அது விளைந்ததெல்லாம் யானறிவேன் என்றுரைத்தனன் என்றும், அங்ஙனம் அரசனோடு சாத்தன் கூறக் கேட்ட அடிகள் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென்றார் என்றும் அடியார்க்கு நல் லார் உரை கூறியுள்ளார். காட்சிக்காதையில் மலைவளங் காணச் சென்று பேரியாற்றங்கரையில் தங்கிய செங்குட்டுவனோடு இளங்கோவடிகளும் சென்றிருந்தனர் என்பதற்கு யாதொரு குறிப்பும் இன்றாகலானும், குறவர்கள் செங்குட்டுவனிடம் உரைத்தனரெனவே ஆண்டுக் கூறியிருத்தலானும், வஞ்சிநகரத்தில் வெள்ளி மாடத்தில்

          'இளங்கோ வேண்மாளுடனிருந்தருளி'னன் என்புழி, இளங்கோ என் பதனை வேறு பிரித்து அடிகள் எனக் கூறினும், அவர் உடன் சென் றார் என்பது பெறப்படாமையானும், உடன் சென்றிருப்பினும் குறவர் அவரிடம் கூற அதனைச் செங்குட்டுவன் கேட்டு அதிசயித்த னன் என்பது கூடாமையானும் அவ் வுரை பொருந்தாமையின், அரும் பதவுரையாசிரியர் ஆய்ந்து கூறிய, 'குணவாயிற் கோட்டத்துக் கட வுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வான வர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக் குரைத்த குறவர் வந்து, எல்லா மறிந்தோய்! இதனை அறிந்தருள் என்று கூறிப்போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்த சாத்தன் அது பட்டவாறெல்லாங் கூற' என்னும் உரையினை மேற்கொண்டு, யாமும் இங்ஙனம் உரை கூறினாம் என்க.

          இதில் (68) 'கடலாடு காதையும்' எனக் குறளடியும், (85) 'வாழ்த்து வரந்தரு காதையொடு' எனச் சிந்தடியும், (86) 'இவ் வாறைந்தும்' எனக் குறளடியும் வந்து, ஏனையன நேரடியாயின மையின் இது குட்டச் செந்தூக்கு ஆகும் ; இணைக் குறளாசிரி யப்பா எனக் கூறலுமாம்.

பதிகம் முற்றிற்று.