பதிகம்




25

கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்

பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறனோர் கள்வன் கையென



23
உரை
26

          கோப்பெருந் தேவிக்கு அல்லதை - கோப்பெருந் தேவிக்கே யன்றி,இச் சிலம்பு - இப் பெரு விலைச் சிலம்பு, யாப்புறவு இல்லை - ஏனோர் அணிதற்குப் பொருத்தமில்லை யாகலான் யான் இதனை அரசற்கு உணர்த்திவருந் துணையும், ஈங்கு இருக்க என்று ஏகி - இக் கோட்டத்தில் இருக்கவெனச் சொல்லிப் போய் பண்டு தான் கொண்ட - தான் முன்பு கள விற் கொண்ட, சில் அரிச் சிலம்பினை - சிலவாகிய அரியினை யுடைய சிலம்பினை, கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என - வேற்று நாட்டவனாகிய ஒரு கள்வன் கையிற் கண்டேன் என்று அரசற்கு உரைப்ப,

        அல்லதை, வினைத் திரிசொல்; ஐ சாரியை எனலுமாம். சுட்டு அதன் பெருமையை உணர்த்திற்று. இருக்கென்று, அகரந் தொக் கது. 'பண்டு தான் கொண்ட' என்றதுகவி கூறியது. அரி - பரல்;; மேல் வழக்குரை காதையில் 'என் காற் பொற்சிலம்பு மணியுடை யரியே என்றலின், சிலவாகிய அரியெனல் கூடாமையின் சாதிபற் றிக் கூறியதெனக் கொள்க; அன்றி, அரி என்பதற்கு வினைத்திறம் என்றும், ஓசை யென்றும் கூறுதலுமாம். அதனைக் காட்டக் கண்ட பொற் கொல்லன் ஏகி உரைப்ப வென்க.

       [அடி. தான் கொண்ட வென்றார் தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினானென்பது தோன்ற. பிறனோர் கள்வன் கையிற் கண்டன னென் றார், தன்னையுங் கள்வனென்றமை தோன்ற.]