8. வேனிற் காதை

  நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு


1
உரை
2

        நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு-வடக்கின்கண் வேங்கடமலையும் தெற்கின்கண் குமரிக் கடலும் எல்லையாக வரையறுக்கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய நீரையுடைய மூவேந்தருடைய உயர்ந்த தமிழ்நாட்டிடத்தே ;

       
நெடியோன் - திருமால். தொடியோள் - குமரி. குமரியாறென்னாது குமரிப் பௌவம் என்றது குமரியாறு முன்னிகழ்ந்ததோர் கடல் கோளால் வௌவப்பெற்று அதனுட் கரந்தமையின் என்க. கிழக்கின் கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களும் எல்லையாகவென விரித்துரைக்க, ஈண்டு அடியார்க்கு நல்லார் விரித்துரைத்த வரலாறு அறியற்பாலது.

       
[அடி. நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பௌவ மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர் ; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் 1"வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும், பிறவாற்றானும், பெறுதும்.]


1.சிலப். 11: 18-20.