8. வேனிற் காதை



5
மாட மதுரையும் பீடா ருறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
இன்னிள வேனில் வந்தன னிவணென


3
உரை
7

        மாட மதுரையும் - சிறந்த மாடங்களையுடைய மதுரையும், பீடுஆர் உறந்தையும் - பெருமை பொருந்திய உறையூரும், கலிகெழு வஞ்சியும் - ஆரவாரம் பொருந்திய வஞ்சி நகரும், ஒலி புனற் புகாரும் - ஒலிக்கின்ற நீரையுடைய காவிரிப்பூம்பட்டினமும் என்னும் நான்கிடத்தும், அரசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் - அரசு வீற்றிருந்த புகழமைந்த சிறப்பினையுடைய மாரனாகிய மன்னனுக்கு, மகிழ் துணையாகிய- மகிழும் துணைவனாகிய, இன் இளவேனில் வந்தது இவண் என - இன்பத்தைத் தரும் இளவேனில் என்பான் இங்கே வந்து விட்டான் என்று ; இளவேனிலாகிய இளவரசன் என்க. வேனில் என்றதற்கேற்ப வந்தது என்றார். வந்தது - வரும் என்னும் எதிர்காலம் இறந்த காலத்தாற் கூறப்பட்டது ; விரைவு பற்றி. இவண் - இங்கே ; புகாரிலே.