8. வேனிற் காதை





60





65

மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூ தன்றிஃ தறிந்தீ மின்னென
எண்ணெண் கலையும் இசைந்துடன் போகப்
பண்ணுந் திறனும் புறங்கூறு நாவின்
தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துரை எழுதிப்


56
உரை
67

          மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் - உலகில் நிலைபெற்ற உயிர்கள் யாவற்றையும் தாம் மகிழுந் துணையோடு புணர்விக்கும், இன் இளவேனில் இளவரசாளன் - இனிய இளவேனிலென்பான் இளவரசன் ஆதலின் நெறிப்படச் செய்யான், அந்திப்போதகத்து அரும்பிடர்த் தோன்றிய- அந்திப் பொழுதாகிய யானையின் அரிய பிடரிலே தோன்றிய, திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன் - திங்களாகிய செல்வனும் கோட்டமுடையன் ஆதலால். புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் - புணர்ந்தோர் சிறிது பொழுதை இடையே பயமின்றாகக் கழிப்பினும், தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் - பிரிந்து சென்றோர் தம் துணையை மறந்து வாராதொழியினும், நறும்பூ வாளி நல்லுயிர் கோடல் இறும்பூது அன்று - நறிய பூவாகிய அம்பு இன்பநுகரும் உயிரைக்கொண்டு விடுதல் புதுமை யன்று, இஃது அறிந்தீமின் என - இதனை அறி மின் என்று, எண்ணெண் கலையும் இசைந்து உடன்போக - அறுபத்து நால்வகைக் கலைகளும் வழிபட்டுப் புகழ்ந்தொழுக, பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் - அவற்றுட் பண்களும் திறங்களும் புறங்கூறும் நாவில், தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து - தளை கட்டவிழ்ந்து குலைந்த தனிப்பட்ட காமத்தையுடைய, விளையா மழலையின் விரித்து உரை எழுதி - முற்றாத மழலையோடே பேசிப் பேசி யெழுதி;

         அந்திப் போதகத்து அரும்பு இடர்த் தோன்றிய எனப் பிரித்து, அந்திப் பொழுதின்கண்ணே அரும்புகின்ற விரகவிதனத்தின் மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வன் என்று பொருளுரைப்பர் அடியார்க்குநல்லார். அவர், அந்தியாகிய யானையின் புறக்கழுத்திற் றோன்றிய திங்களெனிற் பிறையாமாதலின், அது நாடுகாண் காதையுள் ''வைகறை யாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடைநாட் கங்குல்'' என்பதனோடும், கட்டுரை காதையுள் ''ஆடித் திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண'' என்பதனோடும், பிறவற்றோடும் மாறுகொள்ளுமாதலின் அவ் வுரை பொருந்தாதென மறுப்பர். ஆயின் இவர் கருத்துப்படியும் அந்தியோடு திங்களுக்குத் தொடர்பில்லா தொழியவில்லை என்பது கருதற்பாற்று. பொழுதிடைப் படுத்தல் - ஊடல் முதலியவற்றால் விட்டிருத்தல். தணத்தல் - ஓதல் முதலிய ஏதுவாகக் காடிடையிட்டும் நாடிடை யிட்டும் பிரிந்திருத்தல். துணை மறத்தல் - குறித்த பருவத்து வாராது பொய்த்தல். வாளியின் எனப் பாடங்கொண்டு, வாளியால் உயிர் கோடல் அவற்குப் புதிதன்றென வுரைப்பர் அடியார்க்குநல்லார். புறங்கூறும் நா - புறங்கூறுதற்குக் காரணமான நா. புறங் கூற்று - நிகரல்லார் தம் பொறாமையால் அவரில்வழி இகழ்ந்துரைப்பது. பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நா வென்றுரைப்பாருமுளர். தனிப்படு காமம் - சிறந்தார்க்கும் உரைக்கலாவ தன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம்.