8. வேனிற் காதை


மாலை வாங்கிய வேலரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற் களிப்பத்


72
உரை
73

         மாலை வாங்கிய வேல் அரி நெடுங்கண் - அங்ஙனம் மாதவி ஈந்த மாலையை வாங்கிய வேல் போலும் அரி பரந்த நெடிய கண்களையுடைய வசந்தமாலை போய், கூலமறுகிற் கோவலற்கு அளிப்ப - கூலங்கள் செறிந்த மறுகினையுடைய கோவலனைக் கண்டு அவனுக்கு அம் மாலையை நல்க;

         போய் எனவும், கண்டு எனவும் வருவிக்க. நெடுங்கண், ஆகு பெயர்.

         இனி, அம் மாலையைப் பெற்ற கோவலன் மாதவி பண்டு ஊடியும் கூடியும் சென்ற காலத்து அவள்பால் நிகழ்ந்த செய்கைகளையெல்லாம் நாடகவுறுப்புக்களாகிய எண்வகை வரிக்கூத்தாகக் கொண்டு வெறுத்துரைத்தல் கூறுகின்றார். குரவை, வரி என்னும் இரண்டனுள் வரியாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற் கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல். அவ் வரி எட்டு வகைப்படும். அவை - கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என்பன. இவற்றினிலக்கணங்களை, ''கண்கூ டென்பது கருதுங்காலை, இசைப்ப வாராது தானே வந்து, தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப'' ''காண்வரி யென்பது காணுங் காலை, வந்த பின்னர் மன மகிழ் வுறுவன, தந்து நீங்குந் தன்மைய தாகும்'' ''உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவங், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே'' ''புறவரி யென்பது புணர்க்குங் காலை, இசைப்ப வந்து தலைவன்முற் படாது, புறத்துநின் றாடி விடைபெறு வதுவே'' ''கிளர்வரி யென்பது கிளக்குங் காலை, ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய், இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற்பதுவே'' ''தேர்ச்சி யென்பது தெரியுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன், பட்டது முற்றது நினைஇ யிருந்து, தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்'' ''காட்சிவரி யென்பது கருதுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப், பட்டது கூறிப் பரிந்துநிற் பதுவே'' ''எடுத்துக் கோளை யிசைக்குங் காலை, அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர், எடுத்துக்கோள் புரிந்த தெடுத்துக் கோளே'' என்பவற்றான் முறையே அறிக. இனி மாதவியின் செய்கையை இவற்றொடு பொருத்திக் கூறுமாறு காண்க.