|
80
|
புயல்சுமந்து வருந்திப்
பொழிகதிர் மதியத்துக்
கயலுலாய்த் திரிதருங் காமர் செவ்வியிற்
பாகுபொதி பவளந் திறந்துநிலா உதவிய
நாகிள முத்தின் நகைநலங் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்
|
|
புயல்
சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்து - முகிலைச் சுமந்து வருந்திக் கதிரைப் பொழியும்
மதியிடத்தே, கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் - கயல்கள் உலாவித் திரிகின்ற
விருப்பம் பொருந்திய செவ்வியோடே, பாகு பொதி பவளம் திறந்து - பாகைப் பொதிந்த
பவளத்தைத் திறந்து, நிலா உதவிய நாகு இள முத்தின் நகை நலம் காட்டி - ஒளியைத் தருகின்ற
மிக்க இளமையுடைய முத்தின் நகை நலத்தைக் காட்டி, வருகென வந்து போகெனப் போகிய -,
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும் - கரிய நெடிய கண்ணாளுடைய காண்வரி யென்னுங் கோலமும்;
ஈண்டும் குழல் முகம் விழி
வாய் பல் என்பன முறையே புயல் மதி கயல் பவளம் முத்து என்னும் உவமங்களால் கற்போர்
நெஞ்சம் காமுறுமாறு எழில்பெறக் கூறப்பட்டுள்ளன. அமிழ்தும் இன் சொல்லு முடைமையால் வாயினைப்
பாகு பொதி பவளம் என்றார். நாகிள, ஒருபொருளிருசொல். நகை நலம் - ஒளிநலமும் பல்நலமுமாம்.
|
|