8. வேனிற் காதை

90

சிலம்புவாய் புலம்பவும் மேகலை யார்ப்பவுங்
கலம்பெற நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும்
புறத்துநின் றாடிய புன்புற வரியும்


90
உரை
93

         சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - சிலம்பு வாய்விட்டுப் புலம்பவும் மேகலை வாய்விட்டு ஆர்ப்பவும், கலம் பெறா நுசுப்பினள் - கலங்களைப் புனையவும் பெறாத இடையினை யுடையாள், காதல் நோக்கமொடு - காதலையுடையாள்போல் நோக்கிய நோக்கோடே, திறத்து வேறாய என் சிறுமை நோக்கி யும் - தன்னைப் பிரிதலால் இயல்பு திரிந்த என் வருத்தத்தை யறிந்தும், புறத்து நின்று ஆடிய புன் புற வரியும் - என்னுடன் அணையாது புறம்பே நின்று நடித்த புல்லிய புற நடிப்பும்;

         நுசுப்பினள் புலம்பவும் ஆர்ப்பவும் நோக்கமொடு நோக்கியும் ஆடிய வரியுமென்க. கலம் பொறா என்பது பாடமாயின் கலத்தினைச் சுமக்கலாற்றாத என்க.