|
95
100
|
கோதையுங்
குழலுந் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமுந் திருமுலைத் தடமும்
மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும்
|
|
கோதையும்
குழலும் தாது சேர் அளகமும் - பூந்துகள் பொருந்திய மாலையும் குழலும் அளகமும், ஒரு காழ்
முத்தமும் திருமுலைத் தடமும் - ஒரு வடமாகிய முத்தமும் அழகிய முலையிடமும், மின் இடை வருத்த
- மின்போலும் இடை யினை வருத்தும்படி, நன்னுதல் தோன்றி - நல்ல நெற்றியை யுடையாள்
அணுக வாராதே புறவாயிலில் வந்து நின்று, சிறு குறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்ப - சிலதியர்
எனது மறு மாற்றத்தைச் சொல்ல, புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் - புணர்ச்சியை
உட்பொதிந்திருக்கிற எனது புலவிச் சொல்லைக் கேட்டு, இருபுற மொழிப் பொருள் கேட்டனள்
ஆகி - அதனை இருபுற மொழிப் பொருளாகக் கொண்டு, தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் -
தளர்ந்த மேனியினையும் அழகிய மெல்லிய கூந்தலினையு முடையாள், கிளர்ந்து வேறாகிய கிளர்வரிக்
கோலமும் - புலவியால் வேறுபட்டுப் போகின்றாள் போல நடித்துப் போன நடிப்பும்;
தாது சேர் கோதை யெனக்
கூட்டுக. குழல், அளகம் என்பன கூந்தலின் இருவகை முடிகள்; ஐம்பாலில் இரண்டு, இருபுற மொழிப்
பொருள் - இரண்டு வகையாகப் பொருள் பயக்குஞ் சொல். யான் புணர்ச்சி நிமித்தமாகப்
புலந்து சொல்லிவிட்ட மொழியைக் கேட்டு அவ்வாறன்றிப் புலந்து சொன்னேனாகக் கொண்டு
நடந்தாள் என்றான். நன்னுதல் கூந்தல் வருத்தத் தோன்றி உய்ப்பக் கேட்டு வேறாகிய
என்க.
|
|