8. வேனிற் காதை

115

மாலை வாரா ராயினும் மாணிழை
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.



115
உரை
118

         மாலை வாரார் ஆயினும் - இன்னும் மாலைப்பொழுதினுள் வருவார்; அங்ஙனம் வாராராயினும், மாண்இழை - மாட்சிமைப்பட்ட அணியினையுடையாய், காலை காண்குவம் என - காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போமெனச் சொல்லி, கையறு நெஞ்சமொடு - செயலற்ற மனத்தோடு, பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த அழகிய மலரமளியின்மீதே வீழ்ந்து இமை பொருந்தாமற் கிடந்தனள், மா மலர் நெடுங்கண் மாதவி தான் என் - கரிய மலர்போலும் நெடிய கண்ணையுடைய மாதவிதான் என்க.

        வாராராயினும் என்றது வருவாரென்னும் பொருளை அடக்கி நின்றது. காலையில் ஒருதலையாக வருவாரென்பாள் காண்குவம் என்றாள். தான், என் - அசைகள்.

         இது நிலைமண்டில வாசிரியப்பா.