|
1
|
வெண்பா
செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக
மைந்தார் அசோகம் மடலவிழக் -- கொந்தார்
இளவேனல் வந்ததால் என்னாங்கொல் இன்று
வளவேனற் கண்ணி மனம்.
|
|
(செந்தாமரை.......கண்ணிமனம்)
செந்தாமரை விரிய - செந்தாமரை மலர் விரியவும், தேமாங் கொழுந்து ஒமுக-தேமாவின் கொழுந்து
ஒழுகுவது போலும் வனப்புடன் தளிர்க்கவும், மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ - அழகு பொருந்திய
அசோகம் இதழ் விரியவும், கொந்து ஆர் - பூங்கொத்துக்கள் நிறைதற்கேதுவாய, இளவேனல்
வந்தது ஆல் - இளவேனிற் பொழுது வந்தது; என்னாங்கொல் இன்று வள வேல் நற் கண்ணி மனம்
- கூரிய வேல்போலும் நல்ல கண்ணினையுடையாள் மனம் இன்று என்ன துன்பமுறுமோ;
மைந்து - அழகு. கொந்து
- கொத்து; மெலித்தல். வேனல் - வேனில். வேலுக்கு வளமாவது கூர்மை. ஆல், அசை. இது வசந்த
மாலை யென்னும் கூனி ஓலை கொண்டு செல்கின்ற காலத்துத் தன்னுள்ளே சொல்லியது.
|
|