9. கனாத்திறமுரைத்த காதை

  அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்


1
உரை
4

       அகல் நகர் எல்லாம் - அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ் - அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர் - முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய் - நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை - பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி - அழகிய விளக்கையேற்றி, இரவிற்கு ஓர் கோலம் - இராப்பொழுதிற்கேற்றதோர் கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள - கொடி போலும் இடையையுடைய மகளிர் கொள்ளாநிற்க ;

       
நிகர் - ஒளி. மாய்தல் - மறைதல். தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி யென விரித்துரைத்துக் கொள்க. 1 "நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது, மல்ல லாவண மாலை யயர" என்றார் நக்கீரனாரும். மணி விளக்கம் என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு மாணிக்க விளக்கை மைவிளக்கோடே யெடுத்து என்றுரைப்பாருமுளர். இரவிற்கோர் கோலம் - கொழுநர் மார்பை அணைதற்கேற்ற நொய்தானவை உடுத்தும் புனைந்தும் ஒப்பனை செய்த கோலம். கொடியிடையார் மாலையின்கண் தூவிக் காட்டிக் கோலங் கொள்ள என்றியைக்க. தாம், அசை.

1. நெடுநல் 43--4.