9. கனாத்திறமுரைத்த காதை

45




50
கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம்
பட்ட பதியிற் படாத தொருவார்த்தை
இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ


45
உரை
54

       பெறுகேன் - நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் - யான் உற்றதோர் கனவினால் என் னெஞ்சம் ஐயுறுகின்றது ; அக் கனவு என்னையெனின், என் கை பிடித்தனன் போய் - என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட் பட்டேம் - யாங்கள் ஓர் பெரிய பதியின்கட் புக்கேம்; பட்ட பதியில் - அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல் - எங்கட்கு ஏலாததோர் பழிச் சொல்லை அவ் வூரார் இடுதேளிடுமாறுபோல என்மேற் போட்டனர் ; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு - அப் பழிமொழியால் கோவலற்கு ஓர் துன்ப முண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் - அவ் வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால் - அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு ; உரையாடேன் - அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன் ; தீக்குற்றம் போலும் செறி தொடீஇ - செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று ; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற - அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும் - நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும் ; (என - என்று சொல்ல),

       
கடுக்கும் - ஐயுறும் ; கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது. கனவில் என் கைப் பிடித்தனன் போக எனலுமாம். இடு தேளிடுதல் - தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல். என்றன், தன் - அசை. கோவலன் சிலம்பு கவர்ந்தான் என்ற பழிச் சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு என்றன் மேல் இட்டனர் என்றாள். என்று - என்று சொல்ல; சொல்ல என ஒரு சொல் வருவிக்க. அரசன் முன் செல்லாதேன் சென்று வழக்குரையாதேன் வழக்குரைத்தேன் என்றாளென்க. காவலனோடு, ஒடு - எண்ணொடு ; வேறு வினை ஒடுவுமாம். தீங்கு - அரசன் இறத்தலும் ஊர் எரியுண்ணலும். 1 "உரையார், இழிதக்க காணிற் கனா" என்பராகலின், உரையாடேன் என்றாள். தீக்குற்றம் - முலை திருகி யெறிதல். உறுவன் - மிக்கோன்; கோவலன். நற்றிறம் - இருவரும் துறக்கம் புகுதல். இது கிட்டாததென்று நகையாகும் என்றாள். என வென ஒரு சொல் வருவித்து நகையாகுமென என்றுரைக்க.

1. பழ, 182.