9. கனாத்திறமுரைத்த காதை


75
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங்
கேடலர் கோதா யெழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்.


74
உரை
79

       சேயிழை கேள் - சேயிழையே இதனைக் கேள், இச்சிலம்பு முதலாக - நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன் - முன்பு நான் வாங்கியழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று - பரந்த புகழையுடைய மாடங்களையுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று ; என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று - இதழ்கள் விரிந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினை கடைக் கூட்ட - முற்பிறப்பிற் றான்செய்த தீவினை நெடுங்காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் -அவ்வினையினது ஏவலைக் கொண்டான் ; கங்குல் - இருளை, கனை சுடர் - ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன் - அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க.

       நீடி - நெடுங்காலம் நின்று. வியம் - ஏவல். கால் - இடம். சீத்தல் - போக்குதல். மதுரையகத்துச் சென்று ஈட்டுதலுற்றே னென்றானென்க.