|
|
வெண்பா
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க--மூதை
வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன். |
|
(காதலி
கண்ட ...... சீயாமுன்.) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவு, கரு நெடுங்கண் மாதவிதன்
சொல்லை வறி தாக்க - கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க,
மூதை வினை கடைக் கூட்ட - பழவினை நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் கங்குற் கனை
சுடர் கால் சீயாமுன் - கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான்.
இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல் - வேனிற்
காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல்.
கனாத்திறமுரைத்த காதை முற்றிற்று. |
|